search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் தேர்தல்"

    திருவாரூர் தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையம் திருவாரூரில் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது மேற் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழலில் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது எல்லோரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2016 பொதுத் தேர்தலின்போதும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நேரத்திலும் ஆளும் கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    ஆனால் தேர்தல் ஆணையம் அதில் உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை. அது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற புகார்கள் எழுந்தன. பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வருமான வரித்துறை அளித்த தகவலும் கூட மாநில அரசால் உதாசீனப் படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும், அது போலவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர் பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

    5 மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடந்தபோதே இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பருவ நிலையைக் காரணம் காட்டி இங்கு இடைத்தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை என்று தலைமைச் செயலாளர் கூறியிருப்பதாகவும், எனவே தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மழை பெய்யாத நேரத்தில் பருவநிலையைக் காரணம் காட்டித் தேர்தலை ஒத்தி வைத்த ஆணையம் தற்போது கஜா புயல் பாதிப்பில் இருந்து திருவாரூர் வாக்காளர்கள் விடுபடாத நிலையில், அங்கு புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதற்குக் காரணம் என்ன? மற்ற 19 தொகுதிகளில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை? என்பதைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 'தேர்தல் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது’ என்ற குற்றச்சாட்டு அதனால்தான் எழுந்தது.

    இந்தச் சூழலில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் ஆணையமே முன்வந்து திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருப்பதை வர வேற்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களிடையே கேள்விக்குள்ளாகி இருக்கும் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இந்த இருபது தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தும் என்றும் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ThiruvarurByElection

    திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். #TTVDhinakaran #Tiruvarurbyelection
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின்பு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஈபிஎஸ் - ஓபிஎஸ் உடன் அமமுக இணைப்பு என்ற எண்ணமே எனக்கு இல்லை. என்னுடைய தற்போதைய எண்ணம் எல்லாம் திருவாரூர் தேர்தல் பற்றி மட்டுமே.



    திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும்.

    திருவாரூர் தேர்தல் முடிவில் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran  #Tiruvarurbyelection
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் போட்டியிட பா.ஜனதா விரும்புவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #Thiruparankundramconstituency

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை (23-ந் தேதி) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க மதுரை வந்த பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டாலின் பாசி‌ஷ பா.ஜ.க ஒழிக என்று கூறுகிறார். அவரது கட்சியினர் கள்ளத் துப்பாக்கி, பிரியானி கடையில் பிரச்சினை, அழகு நிலையம், பேன்சி கடை போன்ற இடங்களில் பிரச்சினை அடாவடி செய்து வருகிறார்கள்.

    பண மதிப்பீடு இந்தியாவை செம்மைப்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. பா.ஜ.க.வை என்ன செய்ய முடியும்.


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும், பா.ஜ.க. போட்டியிட தான் விருப்பம்.

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல் தேர்தல் நடந்தால் நல்லது. நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். பா.ஜ.க. அரசு பெட்ரோல் விலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.

    ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், மந்திரிகள் யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக்கட்டும். இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதில் தி.மு.க. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடி உள்ளது.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #Thiruparankundramconstituency

    திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் கே.என்.நேரு பேசினார். #thiruvarurelection #dmk

    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோரை திமுக தலைமை கழகம் நியமித்துள்ளது.

    இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்பி விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஒன்றிய, நகர, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் இடைத்தேர்தலை சந்திப்பது குறித்து கருத்துகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் பேசிய தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு பேசியபோது கூறியதாவது, திருவாரூர் சட்டமன்ற தொகுதி மறைந்த திமுக தலைவரை தமிழகத்தில் அதில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த தொகுதி, எனவே இடைத்தேர்தலில் அயராது பாடுபட்டு எந்த தயக்கமின்றி நேர்மையாக சந்தித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்க பாடுபடுவோம் என தெரிவித்தார். #thiruvarurelection #dmk

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #kadamburraju #admk

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் வங்கி சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி வங்கி சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அச்சையா, நே‌ஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம், தபால் துறை உதவி கண்காணிப்பாளர்கள் முருகன், வசந்தி சிந்துதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

    இந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்குள், மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகையை புதுப்பிப்பதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் நடைபெற இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் அரசியலில் அனுபவமே இல்லாமல் பேசி வருகிறார்.

    இதுவரை எந்த துறையிலாவது லஞ்சம், ஊழல் நடந்தது என்று அவரால் நிரூபிக்க முடிந்ததா? அவர் அரசியலுக்கு வர தயாராக இருந்தால், எந்த குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் கூற வேண்டும். ஆதாரம் இல்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இதுவரை நடந்த 11 தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி. திருவாரூர் தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டதால் அக்கட்சி வெற்றி பெற முடிந்தது. இனி அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #kadamburraju #admk

    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு அமமுக பலம் அதிமுகவுக்கு புரியும் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் வரும் செப்டம்பர் 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    பொதுகூட்டம் நடைபெறும் இடத்தை தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி புதுக்கோட்டையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை பொது செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்று உணர்ந்ததால் மன்னிப்பு கேட்டேன்.

    தற்போது 3-வது நீதிபதி முன்பு விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை. வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பிறகு ஆட்சியை கலைக்காமல் புதிய முதலமைச்சர் நியமனம் செய்யப்பட்டு ஆட்சி தொடரும்.

    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும். அ.தி.மு.க., பா.ஜ.க. வோடு கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அ.ம.மு.க.தான் வெற்றி பெறும். அப்போது அ.ம.மு.க. தான் டாப்பு. அ.தி.மு.க. டூப்பு என்பது தெரியவரும்.

    அதன் பின்னர் ஆட்சியையும் கட்சியையும் எங்களிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அ.தி. மு.க. நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தது. ஆனால் கருணாநிதி இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யாதது ஏன். இதிலிருந்து தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. சமீப காலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது

    தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk

    நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அழைப்பாளர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எத்தகைய முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பெரும்பாலான அ.தி.மு.க. உறுப்பினர்கள், இந்த செயற்குழு வெறுமனே சம்பிரதாயத்துக்கு நடத்தி முடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    அ.தி.மு.க.வுக்கு புதிய உயிரும், புத்துணர்ச்சியும் அளிக்கப்பட வேண்டுமானால் சில முக்கிய முடிவுகளை எடுத்தே தீர வேண்டும் என்று கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அடுத்த வாரம் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். டி.டி.வி.தினகரன் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது.

    அது போல கட்சி சட்ட விதிகளில் மாற்றம் செய்தது தொடர்பான வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இத்தனை பரபரப்புக்கிடையே திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட அத்தனை வி‌ஷயங்களையும் அ.தி.மு.க.வால் சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. இதனால்தான் நாளை நடக்கும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அ.தி.மு.க.வுக்கு தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, கட்சி விதிகளில் திருத்தம் வழக்கு ஆகிய மூன்றும் முக்கியமானதாக உள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அ.தி.மு.க.வில் எத்தகைய முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதே பாணியை கடைபிடிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 2013-ம் ஆண்டே பூத் கமிட்டியை ஜெயலலிதா உருவாக்கி இருந்தார். அதனால்தான் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வால் 99 சதவீத வெற்றியை பெற முடிந்தது. ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் எந்தவித முன் ஏற்பாடும் தயார் செய்யப்படவில்லை என்று வேதனையோடு அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியை தழுவ நேரிட்டால், அ.தி.மு.க. மீதான மதிப்பு மக்கள் மத்தியில் வீழ்ச்சி அடைய தொடங்கி விடும் அபாயம் உள்ளது. செயற்குழுவில் இது பற்றி விவாதித்து புதிய யுத்தியை கையாள முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த இரு இடைத்தேர்தலுக்கும் டி.டி.வி.தினகரன் ஓசையின்றி தயாராகிவிட்டார். வேட்பாளரை கூட அவர் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அ.தி.மு.க.வில் இதற்கான பணிகள் இன்னமும் தொடங்கவில்லை. மாறாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பல கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பதே பெரும் சவாலாக இருக்கும் என்பதால் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் ஒரு தேக்கநிலை உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி பணிகளை உடனுக்குடன் செய்ய வழிகாட்டுதல் குழு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் வழிகாட்டும் குழு அமைக்கப்படவில்லை.

    இதனால் மாவட்டங்களில் அ.தி.மு.க. பணிகள் சுறுசுறுப்பு இல்லாமல் உள்ளன. திருவள்ளூரை 3 மாவட்டமாகவும், வேலூரை 4 மாவட்டமாகவும் மாற்றி தி.மு.க. மேலிடம் நிர்வாகிகளை நியமித்துள்ளது. அது போல அ.தி.மு.க.விலும் கூடுதல் மாவட்ட நிர்வாகங்கள், அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


    மேலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் 2 அல்லது 3 பதவிகளை வகித்து வருகிறார்கள். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராகவும் கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

    இப்படி மற்ற மூத்த தலைவர்கள், 2-ம் கட்ட தலைவர்களிடம் பல பதவிகள் குவிந்து கிடக்கிறது. இதையெல்லாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுத்து பொறுப்புகளை ஒப்படைத்தால்தான் அ.தி.மு.க.வில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கிறார்கள்.

    கட்சியில் நன்கு செயல்பட கூடியவர்களில் பலர் பொறுப்புகள் இல்லாமல் உள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பதவி தரப்படாததால் விரக்தி அடைந்துள்ளனர்.

    இத்தகைய விரக்தியான நிலையில் உள்ளவர்கள்தான் டி.டி.வி.தினகரனின் புதிய கட்சிக்கு தாவுவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமானால் நாளைய அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகத்துக்கான அதிரடி முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    ×